EVERYDAY LOCAVORES
"நாங்கள் காலம் காலமாக இந்த தீவுகளில் வாழ்ந்து கடலுக்கு சென்றுகொண்டிருக்கிறோம். இந்த கடல் எங்களுக்கு சொந்தமில்லை என்று அரசு எப்படி சொல்ல முடியும்?"
—பாண்டியம்மாள், 44, ராமேஸ்வரம், தமிழ்நாடு
By Rashmi Sridar and Revathi Sunil
11 August 2026
தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்திலுள்ள சின்னபாலம் கிராமத்தில் வசிப்பவர்தான் எஸ். பாண்டியம்மாள்,வயது 44. அதிகாலையில் 5 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளையும் சமையலையும் கணவர் செல்வராஜ் கடலிலிருந்து வரும் முன் முடிக்கிறார். பிறகு கடற்கரைக்கு சென்று கணவரின் வலையிலுள்ள நண்டுகளை தெறித்து , பாசியை எடுத்து சரி செய்யவே இரண்டு மணி நேரத்திற்கு மேலாகின்றது. “எனக்கு எட்டு வயது இருக்கும் போதுதான் முதன்முதலாக கடலுக்கு சென்றேன். முதல் முறை செல்லும் பொழுது கடல் அலை, கடல் காற்று, படகின் அசைவு இவற்றினால் வாந்தி, தலைச்சுற்று போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த ஓர் உணர்வு எனக்கு எப்போதுமே பிடித்ததில்லை. ஆனால் தினம் தோறும் கடலுக்குச் செல்பவர்களுக்கு காலப்போக்கில் அதுவே பழகி விடுகிறது.”
கடைகோடியான இராமேஸ்வரத்தில், மன்னார் வளைகுடாவை பார்த்தப்படி தென்மேற்கு திசையில் சின்னபாலம் அமைந்துள்ளது. “எங்கள் கிராமத்தில் மட்டும் தான் ஆண்களும், பெண்களும் இணைந்தே மீன்பிடிக்க செல்வோம்” என்று கூறுகிறார் பாண்டியம்மாள். மீன்பிடித்தல், கடல் பாசி சேகரித்தல், சிப்பி சேகரித்து அதில் கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற வேலைகளை இங்குள்ள மீனவ பெண்கள் செய்து வருகிறார்கள்.
1989-ம் ஆண்டில் மன்னார் வளைகுடா பகுதி கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டு படகு மீனவர்களின், குறிப்பாக பெண்களின், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. சின்ன பாலத்தில் உள்ள மீனவர்கள் மட்டுமல்லாத தோப்புக்காடு, முந்தல் முனை, தரவை தோப்பு போன்ற கிராமங்களை சார்ந்த மீனவர்கள் அருகிலுள்ள குருசடை தீவு, கோரி தீவு, முயல் தீவு போன்ற பல தீவுகளில் தலைமுறை தலைமுறையாய் மீன் பிடிப்பை மேற்கொள்கின்றார்கள். “நாங்கள் காலம் காலமாக இந்த தீவுகளில் வாழ்ந்து கடலுக்கு சென்றுகொண்டிருக்கிறோம். இந்த கடல் எங்களுக்கு சொந்தமில்லை என்று அரசு எப்படி சொல்ல முடியும்?” இந்த அநீதி பாண்டியம்மாள் அவர்களை 22 வயதில் ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்து சின்னப்பாலம் மீனவர்களின் கடல் உரிமைக்காக போராடுவதற்கு தூண்டியது.
தற்போது இந்த சங்கத்தில் 4200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர் – பெண்கள் மட்டும் 1809 பேர் உள்ளனர். மீன் பிடி என்பதே நாட்டு படகு மீனவர்களுக்கு நிலையான வருமானம் இல்லாத ஒரு தொழில். காலநிலை மாற்றத்தினால் இது மேலும் நம்பகம் இல்லாத தொழிலாக மாறியுள்ளது. மீனவ பெண்கள் பாசி எடுத்தல், மீன் பிடித்தல் போன்றவற்றிற்கு அடையாள அட்டை (ஐடி கார்டு) இல்லாமல் மேலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள். வீட்டு வேலைகளையும் சுமக்கும் பெண் மீனவர்கள் மீது ஏற்படும் இந்த தாக்கம் மிக அதிகம் என அறிந்து ஊராட்சி மற்றும் கிராம தலைவரிடம் பாண்டியம்மாள் பெண்களின் குறைகளை எடுத்து கூறுகிறார். “ஜூன் மாதத்தில், நாங்கள் [சின்னபாலாம் கிராமத்தின் பெண்கள்] மீனவ அமைச்சரிடம் கிராமத்திலுள்ள மதுக்கடையை மூட கோரிக்கை வைத்துள்ளோம். ஆண்கள் தங்களின் வருமானத்தின் பெரும் பகுதியை, மதுவிற்காக வீணாக்குகிறார்கள். இதனால், பெண்கள்தான் வேலை பார்த்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெரும் பொறுப்பை தனியாக ஏற்க வேண்டியுள்ளது”, என பாண்டியம்மாள் கூறினார்.
மீன்பிடி தொழில் என்பது உயிருக்கு பாதுகாப்பற்ற தொழில் என்று பாண்டியம்மாள் அறிவார். “நான் பட்ட கஷ்டம் என்னுடைய பிள்ளைகளுக்கும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என் முதல் மகன் ஆசிரியராகவும், மற்றொரு மகன் நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகவும் இருக்கின்றனர். தற்பொழுது கடலில் மீன்வளம் குறைந்து விட்டது. அடுத்த தலைமுறைக்கு நிலையான வருமானம் தரும் வேலைகள் தேவை. அனைவரும் படிக்க வேண்டும்”, என்று பாண்டியம்மாள் உறுதியாகக் கூறுகிறார்.
ஆனால் கிராமத்தின் பட்டதாரிகளுக்கு நிலையான வேலை வாய்ப்பு இல்லாமல், மீண்டும் மீன் பிடி தொழிலுக்கே திரும்பும் நிலையுள்ளது. “மீன்வளம் மற்றும் வனத்துறையிலுள்ள அரசு சார்ந்த பணிகளில் மீனவ சமூகத்தை சேர்ந்த படித்த இளைஞர்களை அமர்த்தவேண்டும். தற்போது ஏதேனும் அரசு சார்ந்த திட்டங்களுக்கு ஒப்புதலோ அல்லது உதவியோ தேவைப்பட்டால் நாங்கள் இத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக பல நாட்கள், பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் எங்கள் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், அப்படி காத்திருக்க வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படுமா?” என்று கேட்கிறார் பாண்டியம்மாள்.
பாம்பன் பகுதியில் உள்ள ஊராட்சி நூலகத்திற்கு சின்னப்பாலம் கிராமத்திலிருந்து குழந்தைகளை அழைத்து செல்லும் பாண்டியம்மாள்.
தனது கணவர் பிடித்து வரும் நீல நண்டு, சம்மா நண்டு மற்றும் சிவப்பு நண்டு ஆகியவற்றை வலையிலிருந்து பிரித்து சேகரிப்பதற்கு வாரத்தில் பல மணி நேரங்களை உழைக்கிறார் பாண்டியம்மாள்.
சின்னப்பாலத்தின் பெண்கள் வீட்டு வேலை மற்றும் மீன்பிடி சார்ந்த வேலைகளின் சுமையை சுமப்பத்தோடு, மீனவர் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றனர். “போராட்டம் நடக்கும் பொழுது பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் செல்வதற்கான செலவை பெண்களே ஏற்கிறார்கள். மேலும் போராட்டங்களின் விளைவாக ஏற்படும் கைது நடவடிக்கைகளில் சில சமயம் காவல்துறை எங்களை திருமண மண்டபம் அல்லது பொதுக் கூடங்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள்”, என பாண்டியம்மாள் கூறுகிறார்.
சின்னப்பாலம் கிராம தலைவர் மற்றும் பாண்டியம்மாள் மீனவ மக்களின் கோரிக்கைகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் சமர்பித்தார்கள். “நான் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 40 – 50 வருடங்களாக நில உரிமை ஆவணம் (பட்டா) ஏதுமின்றி கிராமத்தின் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த 10 மீனவ குடும்பங்களுக்கு பட்டா மற்றும் வீடுகளுக்கான வழிவகைகளை செய்திருக்கிறேன்” என்று பாண்டியம்மாள் கூறினார்.
Rashmi Sridar is the Woman Farmer Project Writer-Researcher fellow from Tamil Nadu, trained in Geographical Information Systems (GIS) and environmental law. She is interested in working with fishing communities using participatory approaches with a focus on women’s labour, seafood markets, and collective action.
Revathi Sunil is the Woman Farmer Project Audio-Visual fellow from Tamil Nadu. She is a Bengaluru-based filmmaker, writer, and editor interested in intimate, non-intrusive storytelling that centres the dignity, complexity, and perspectives of those furthest from the frame.
Oishika Roy
Editor
Khorshed Deboo
Copy Editor
Shreya Bansal
Additional Inputs
Mukta Patil
Additional Inputs
This story was produced in partnership with Dakshin Foundation. Read more about their work here.
This story is part of the Woman Farmer Project, a multimedia storytelling initiative led by The Locavore in partnership with the Doc Society Climate Story Kitchen. It aims to build a roadmap for successful collaborations between institutions and innovative grassroots networks who are committed to amplifying climate stories.
The Doc Society supports climate action across the globe by championing independent filmmakers, audio producers, journalists, and artists working alongside impact producers and movement builders to bring more communities into climate conversations to advance climate just and biodiverse futures.
Share this:
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to print (Opens in new window) Print